×

கோடைகாலம் தொடங்கி உள்ளதால் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரிப்பு

*ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடந்தது

வேலூர் : கோடைகாலம் தொடங்கி உள்ளதால், வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்து நேற்று ரூ.1 கோடி வர்த்தகம் நடைபெற்றது.
தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு மற்றும் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

தற்போது வெயில் கொளுத்துவதால் பச்சை புற்கள் அனைத்தும் கருகி வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு வரும் நாட்களில் தீவனம் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கால்நடைகளை விற்பனை செய்யும் வகையில் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் வழக்கத்தை விட நேற்று கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 1500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், 300க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதன் காரணமாக நேற்று ஒட்டுமொத்தமாக பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை ஏறத்தாழ ₹1 கோடிக்கு தாண்டியதாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கோடைகாலம் தொடங்க உள்ளதால் பச்சை புற்கள் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் வைக்கோல் மற்றும் தீவனம் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்கின்றனர். தற்போது கால்நடைகள் நல்ல விலைக்கு செல்கிறது. நேற்று 1500க்கும் மேற்பட்ட மாடுகள், 300க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது. கறவை மாடுகளுடன், காளைகளும் அதிகளவில் விற்பனை நடந்துள்ளது’ என்றனர்.

The post கோடைகாலம் தொடங்கி உள்ளதால் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : RS. 1 CRORE ,RS. 1 ,CRORE ,Vellore ,Tamil Nadu ,
× RELATED திருச்சியில் பெய்த சூறாவளி, கனமழையால்...